ரகசிய இடத்திற்கு வாடகை தாய்களை இடமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு!
சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள சிஎப்சி கருத்தரிப்பு மையத்தில் சட்டவிரோதமாக வாடகைத்தாய் முறையில் கருத்தரிப்பு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சூளைமேட்டில் அமைந்துள்ள வீடுகளில் வடமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த இளம் பெண்களை அழைத்து வந்து சட்டவிரோதமாக கருத்தரிப்பு செய்து குழந்தைகளை விற்று வருவதாக செய்திகள் வெளியாகின. ஒரே வீட்டில் பத்திருக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை அடைத்து வைத்து கோழி பண்ணை போன்று தங்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை அடுத்து மாநில மகளிர் நல ஆணையம் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிஎப்சி மருத்துவமனையில் விசாரணை நடத்துவதற்காக சுகாதாரம் மற்றும் ஊரக திட்ட பணிகள் துறை அதிகாரிகள் நான்கு பேர் விசாரணைக்காக வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விசாரணை அதிகாரிகள் வாடகை தாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதே நேரத்தில் சூளைமேட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து கர்ப்பிணி பெண்கள் ரகசிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.