வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை வழுக்கல் அருவியில் தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள தாணிப்பாறை வழுக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தாணிப்பாறை வழுக்கல் அருவிக்கு கீழே உள்ள பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகம் இருப்பதால் இந்த அருவி பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் ஆட்கள் இல்லாமல் தாணிப்பாறை வழுக்கல் அருவி மற்றும் அதற்கு கீழே உள்ள சிறிய அருவி ஆகியவற்றில் தண்ணீர் தொடர்ந்து கொட்டியபடி இருப்பதை யாரும் ரசிக்க முடியாத நிலை தொடர்கிறது. இப்பகுதியில் மழை தொடர்ந்தால் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு கூடுதலாக வாய்ப்பு உள்ளது. மலையில் இருந்து வரக்கூடிய தண்ணீ்ர் பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணங்கள் கலந்து வருவதால் அதில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது பொதுமக்கள் நம்பிக்கையாக உள்ளது. இதனால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால் நீர்வரத்து அதிகம் இருப்பதால் தற்போது அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.