விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முதல் வாரத்தை எட்டியுள்ளது. கடந்த சீசன்களை ஒப்பிடும்போது முதல்வாரமே இந்த சீசனில் அதிரடியாக இருந்தது. அதற்கு காரணம் பிக்பாஸ். வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களை ஒருநாள் கூட விருந்தினர்களாக கருதாமல், ஆரம்பம் முதலே டாஸ்க் கொடுத்து அசத்தினார். வந்தவுடன் உங்களை கவர்ந்த போட்டியாளர்கள் யார் என்ற கேள்வியை போட்டியாளர்களிடம் கேட்டு, அதில் குறைவான ஆதரவை பெற்ற போட்டியாளர்களை வீட்டிற்கு வெளியே படுக்க வைத்தார். மேலும், அவர்கள் நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறுவார்கள், வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்குகளில் சிறப்பாக பங்களிக்கும்பட்சத்தில் அணி தலைவரிடம் பேசி மற்றவர்களை ஸ்வைப் செய்து கொள்ளலாம் என்ற ஆப்சனையும் கொடுத்தார்.
இந்த டாஸ்க் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்கேற்ப ஜிபி முத்து, விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி தங்களை நாமினேஷன் லிஸ்டில் இருந்து விடுவித்துக் கொண்டனர். மேலும், கிடைக்கும் வாய்புகளில் எல்லாம் தங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்த போட்டியாளர்கள் கடுமையாக முயற்சி செய்தனர். அமுதவாணன், ஜிபி முத்து ஆகியோர் எண்டர்டெயினராக வீட்டிற்குள் கலக்க, அவர்களுக்கு ஈடாக ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அசல் கோலார், ரக்ஷிதா உள்ளிட்டோரும் சிறப்பாக விளையாடினர். தனலட்சுமி மற்றும் ஆயிஷா முதல் வாரத்தின் சண்டைகோழிகளாக இருக்கின்றனர்.
சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் முதல் வாரத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை பட்டியலிட்டு, போட்டியாளர்களை பாராட்டியதுடன், எப்படி விளையாட வேண்டும் என்ற டிப்ஸையும் பகிர்ந்து கொண்டார். இது ஒருபுறம் இருக்க, வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார் பிக்பாஸ். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றிருக்கிறார் மைனா நந்தினி. அவர் வீட்டிற்குள் என்டிரியான எபிசோடு ஞாயிற்றுகிழமையான இன்று ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும்போது வீட்டிற்குள் செல்லாத அவர், முதல் வாரமான இன்று வீட்டிற்குள் சென்றிருக்கிறார். அவரை வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.