பிரதமர் விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: ரூ.2 லட்சம் கோடி விடுவிப்பு!

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டம் (PM KISAN – பி.எம் கிசான் சம்மான் நிதி) 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு ரூ.6,000 விவசாயிகளுக்கு நிதியுதி அளிக்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் இதில் பயன் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் 2022” என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 17ஆம் தேதி காலை 11:30 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 13,500 விவசாயிகளும், 1500 வேளாண் புத்தொழில் நிறுவனத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். காணொலிக் காட்சி வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களும் இந்த சம்மேளனத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்ச்சியில் ஒருபகுதியாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக சம்ரிதி மையங்களாக மாற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு தேவைகளை இந்த மையங்கள் பூர்த்தி செய்யும். இதனுடன், வேளாண் சம்பந்தமான உள்ளீடுகள் (உரங்கள், விதைகள்); மண், விதைகள், உரங்களின் பரிசோதனைக்கான வசதிகள்; விவசாயிகளிடையே விழிப்புணர்வு; பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த தகவல்கள் முதலியவற்றை இந்த மையங்கள் வழங்குவதோடு வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சில்லறை வணிகர்களின் திறன் கட்டமைப்பையும் உறுதி செய்யும். சுமார் 3.3 லட்சம் சில்லறை உர விற்பனையகங்களை சம்ரிதி மையங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது பாரத் மக்கள் உரத்திட்டம் என்ற பெயரில் ஒரே நாடு, ஒரே உர திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார். “பாரத்” என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக பாரத் யூரியா பைகளையும் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது ‘இந்தியன் எட்ஜ்’ என்ற உரம் சம்பந்தமான மின்னணு சஞ்சிகையையும் (e-magazine) பிரதமர் மோடி அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 12ஆவது தவணையாக, நேரடி பலன் பரிவர்த்தனையின் மூலம் ரூ. 16,000 கோடியை நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி விடுவிக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வீதம் 3 தவணையாக தலா ரூ. 2000 வழங்கப்படும். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.