பாட்னா: கங்கை நதியில் கட்டப்பட்ட சாத்காட் பகுதியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆய்வு செய்த போது, படகு மின் கம்பத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கங்கை நதியின் கட்டப்பட்ட சாத்காட் பகுதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழுவுடன் நீராவி படகில் சென்றார். அப்போது நதியின் இடையே இருந்த மின் கம்பத்தின் மீது ‘ஸ்டீமர்’ படகு மோதியது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தானாபூரில் உள்ள நசிர்கஞ்சில் இருந்து நீராவி படகில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கங்கை நதியில் கட்டப்பட்டுள்ள சாத் காட் பகுதிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த படகானது அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதனால் தொடர் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. உடனடியாக முதல்வர் நிதிஷ் குமாரும் மற்ற அதிகாரிகளும் வேறு நீராவி கப்பலுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் அவர் தொடர்ந்து தனது ஆய்வுப் பணியை மேற்கொண்டார்’ என்று கூறினர்.