லைகர் தோல்வியால் அழுதுக் கொண்டிருக்க முடியாது: பூரி ஜெகன்னாத்

தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி வெளியான படம் லைகர். தெலுங்கு – ஹிந்தியில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்தும் வெளியிடப்பட்டது. ஆக்சன் கதையில் உருவான இப்படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருந்தார். இதனால் இப்படத்துக்கான எதிர்பார்ப்பும் எகிறி நின்றது. ஆனால் இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. படம் தோல்வி அடைந்ததால் லைகர் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக படத்தின் இயக்குனர் பூரி ஜெனன்னாத் கூறியுள்ளதாவது: வெற்றி தரும் ஏகப்பட்ட உற்சாகத்தை தோல்வி மழுங்கடிக்க செய்து விடுகிறது. வெற்றியின்போது நாம் மேதையாக உணர்வோம்; அதே சமயம் தோல்வி நம்மை ஒரு முட்டாளைப்போல உணர வைத்துவிடும். படங்கள் வெற்றிபெறும்போது நம்மை நம்பியவர்கள், படங்கள் தோல்வியடையும் போது அப்படியே எதிர்மறையாக நமக்கு எதிராக திரும்பிவிடுவார்கள். நமக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள் இருக்கும். அதையெல்லாம் எதிர்கொள்ள போதிய வலிமை வேண்டும்.

நாம் காயமடைந்தால், அதிலிருந்து குணமடைந்து விடுபட காலம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த மீளும் காலம் மிக குறைவாக இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். நாம் ஒருவரை இழக்க நேரிடலாம், செல்வம் நம்மைவிட்டு போகலாம் எதுவானாலும் சரி அதிலிருந்து மீள்வதற்கான காலம் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. நாம் அடுத்தடுத்த விஷயங்களுக்கு கடந்து செல்ல வேண்டும்.

நான் மூன்று வருடங்கள் லைகர் படத்தில் வேலை செய்தேன். அந்த படத்திற்காக நடிகர்களுடன் இணைந்து அழகான செட்களை உருவாக்கி, மைக் டைசனுடன் படமாக்கினேன். ஆனால், அது தோல்வியடைந்தது. அதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாம் அழ முடியாது. அதை திரும்பிப் பார்த்தால், நான் சோகமாக இருந்த நாட்களை விட நான் மகிழ்ச்சியாக இருந்த நாட்களே அதிகம். ​​உங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு படத்தை உருவாக்குவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் மகிழ்வீர்கள். சிறந்த சினிமா உருவாகும். இவ்வாறு உருக்கமாக கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.