
'ஆர்ஆர்ஆர்' – ஆஸ்கர் விருது வாங்க ரூ.50 கோடி செலவு?
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து இந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வு செய்யப்படாத நிலையில், நேரடியாக அந்தப் போட்டியில் இப்படம் கலந்து கொள்கிறது.
இதற்காக ராஜமவுலி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு 'ஆர்ஆர்ஆர்' படத்தின் சில சிறப்புக் காட்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. 'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பற்றி ஆஸ்கர் குழுவுக்கும், அமெரிக்க ரசிகர்களுக்கும் தெரிவிப்பதற்காக பல்வேறு விதமான பிரமோஷன் நிகழ்வுகளும் அங்கு நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.50 கோடிக்கும் அதிகமாக படக்குழு செலவு செய்வதாக டோலிவுட் வட்டாரங்களில் ஏற்கெனவே பேசப்பட்டு வருகிறது. இந்த செலவுகள் அனைத்தையும் ராஜமவுலியே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

'பாகுபலி 1,2', 'ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் மூலம் ராஜமவுலி 300 கோடிக்கும் மேல் சம்பளம் பெற்றுள்ளதாக ஒரு தகவல் உண்டு. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக ஒரு சில ஆஸ்கர் விருதுகள் வென்றால் கூட சர்வதேச அளவில் அவரது மார்க்கெட்டும் பிரபலமும் உயர்ந்துவிடும். அதனால்தான் பல விஷயங்களை அமெரிக்காவில் தங்கி செய்து வருகிறாராம் ராஜமவுலி.