ஹோபர்ட்,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் ஹோபர்ட்டில் நடக்கின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடக்கும் முதலாவது ஆட்டத்தில் நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீசும், ரிச்சி பெரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்தும் மோதுகின்றன.
20 ஓவர் உலக கோப்பையை இரண்டு முறை வென்ற ஒரே அணியான வெஸ்ட் இண்டீஸ் தரவரிசையில் பின்தங்கியதால் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் வாய்ப்பை இழந்து முதல் சுற்றில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, பொல்லார்ட் போன்ற வீரர்களின் ஓய்வும், ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின், கடைசி நேரத்தில் விமானத்தை தவற விட்ட ஹெட்மயர் ஆகியோரின் நீக்கமும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். என்றாலும் ஒருங்கிணைந்து விளையாடினால் தங்களால் சாதிக்க முடியும் என்று கேப்டன் பூரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பூரன், இவின் லீவிஸ், பிரன்டன் கிங், ஷமார் புரூக்ஸ், ரோவ்மன் பவெல் என்று அதிரடி சூரர்கள் அந்த அணியில் நிறைய பேர் இருப்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
ஸ்காட்லாந்தும் ஓரளவு திறமையான அணி தான். தனது கடைசி 7 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய அந்த அணி எழுச்சி பெறும் முனைப்புடன் உள்ளது. இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் மோத இதுவே முதல் முறையாகும்.
தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி, கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வேயுடன் மல்லுகட்டுகிறது. இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு 8 முறை மோதியுள்ளன. அதில் 5-ல் அயர்லாந்தும், 3-ல் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.