எத்தனை அம்பு எய்தாலும் தடுப்போம்!: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்‍கு ஆதரவு தெரிவித்து கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவு..!!

டெல்லி: டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். டெல்லியில்  கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ  குற்றம்சாட்டியது. இதில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிசோடியாவிடம் சிபிஐ பலமுறை விசாரித்து விட்டது. தொடர்ந்து, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் சிசோடியா இன்று ஆஜராகியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக, மணீஷ் சிசோடியா வீட்டை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  முதலமைச்சரும் ஆம் ஆத்மீ தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா தொடர்பான கார்ட்டூன் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி எஜிகேசன் மாடல் என்ற கேடயத்தை சிசோடியா கையில் பிடித்திருப்பதும், கேடையத்தின் மீதும், சிசோடியாவின் முதுகின் மீதும் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அம்புகள் பாய்ந்திருப்பதும், நடுவே ஒரு பெண் குழந்தை கல்வி கற்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை அம்பு எய்தாலும் தடுப்போம் என்பது போன்ற வடிவமைப்பில் சித்திரம் அமைந்திருந்தது. இந்த புகைப்படத்தை ஆம் ஆத்மீ கட்சியினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.