கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடலில் முக்கிய உறுப்புகள் மாயம்: மனித மாமிசம் மந்திரவாதிகளுக்கு விற்பனை?

திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடலிலும் முக்கிய உறுப்புகள் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த நரபலி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது ஷாபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் மாமிசத்தை குக்கரில் வேக வைத்து சாப்பிட்டது தெரியவந்தது. செல்வம் சேர சிறப்பு பூஜை நடத்துவதாக கூறி ஷாபி பல தவணைகளாக பகவல் சிங், அவரது மனைவி ஆகியோரிடம் ரூ.6 லட்சம் வரை பணம் வாங்கியிருந்தார். அதை 2 பேரும் திருப்பிக் கேட்ட போது தான் நரபலி கொடுத்து மாமிசத்தை விற்பனை செய்தால் பல லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று நம்ப வைத்து உள்ளார்.

பெங்களூருவில் ஒரு மந்திரவாதி இருப்பதாகவும், அவரது ஆட்களுக்கு மனித மாமிசத்தை விற்பனை செய்தால் ரூ.20 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்றும் கூறி உள்ளார். அதை பகவல் சிங்கும், லைலாவும் நம்பி உள்ளனர். ஆனால் ரோஸ்லியை நரபலி கொடுத்த பிறகும் மாமிசத்தை வாங்க யாரும் வரவில்லை. அது குறித்து கேட்ட போது, நல்ல நேரத்தில் நரபலி கொடுக்கவில்லை என்றும், அடுத்து ஒரு பெண்ணை நல்ல நேரத்தில் நரபலி கொடுத்தால் கண்டிப்பாக கூடுதல் விலைக்கு மாமிசத்தை வாங்க ஆட்கள் வருவார்கள் என்றும் கூறி உள்ளார். அதையும் பகவல் சிங்கும், லைலாவும் நம்பினர். அதன் பிறகுதான் பத்மாவை நரபலி கொடுத்து உள்ளனர். மேலும் நரபலி கொடுத்த பின்னர் பகவல் சிங்கையும், லைலாவையும் மிரட்டி பணம் பறிக்கவும் ஷாபி திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையே 2 பேர் உடலிலும் இதயம், சிறுநீரகம் உள்பட முக்கிய உறுப்புகள் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

* நரபலி வீட்டை பார்க்க கூட்டம்
2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூர் என்ற கிராமத்தில் உள்ள பகவல் சிங்கின் வீட்டை பார்ப்பதற்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிகின்றனர். வீட்டை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாரையும் அந்த பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதிப்பதில்லை.

* உயிருடன் துண்டாக்கிய கொடூரம்
பத்மாவையும், ரோஸ்லியையும் நரபலி கொடுத்த பின்னர் 3 பேரும் சேர்ந்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்தனர். பத்மாவின் உடலை 56 துண்டுகளாகவும், ரோஸ்லியின் உடலை 5 துண்டுகளாகவும் வெட்டி பின்னர் குழி தோண்டி புதைத்தனர். இவர்களில் ஒருவரை முதலில் கழுத்தை நெரித்துக் கொன்று உடலை பல துண்டுகளாக்கினர். ஆனால் இன்னொரு பெண்ணை உயிருடனேயே துடிக்கத் துடிக்க துண்டு துண்டாக வெட்டியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

ஷாபி இதற்கு முன்பு ஒரு இறைச்சி கடையில் பணிபுரிந்து உள்ளார். மேலும் எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்த 2 இடங்களில் பணிபுரிந்த அனுபவம் தான் உடல்களை எளிதில் வெட்டி துண்டுகளாக்குவதற்கு ஷாபிக்கு கை கொடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.