தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘சின்ன குஷ்பு’ என்று தமிழ்நாட்டில் தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்காகத் தன்னார்வல அமைப்பு மற்றும் ஒரு காப்பகத்தையும் நடத்தி வருகிறார். சில குழந்தைகளின் படிப்புச் செலவை ஹன்சிகாவே ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் ஹன்சிகா மிகவும் அழகாக ஓவியங்கள் வரைபவர், தான் வரையும் ஓவியங்களை விற்று அதில் வரும் தொகையையும் தன்னுடைய குழந்தைகள் காப்பகத்திற்காக ஒதுக்குகிறார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழைமையான அரண்மனை ஒன்றில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் மணமகன் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பாக ஹன்சிகாவிடமிருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.