ஸ்ரீநகர்: ‘இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கு டிஜிட்டல் வங்கி பயன்பாடுதான் காரணம்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2022-23 ஒன்றிய பட்ஜெட்டில், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூறும் வகையில் நாட்டின் பல மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பொதுத்துறையில் 11 வங்கிகளும், தனியார் துறையில் 12 வங்கிகளும், ஒரு சிறு நிதி வங்கியும் டிஜிட்டல் வங்கி பணியில் ஈடுபட்டு வந்தன. இந்த பணிகள் தற்போது முடிந்த நிலையில், நாடு முழுவதும் ஜம்மு காஷ்மீரில் 2 வங்கிகள் உட்பட 75 டிஜிட்டல் வங்கிகளை நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதில், அவர் பேசுகையில், ‘ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அதன் வங்கி அமைப்பின் வலிமையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு காரணம், 2014க்கு முந்தைய ‘போன் வங்கி’ நடைமுறையை ‘டிஜிட்டல் வங்கி’ நடைமுறையாக மாற்றுவதற்காக பாஜ அரசு எடுத்த முயற்சிகள்தான். வங்கித் துறை நல்ல நிர்வாகம் மற்றும் சிறந்த சேவை வழங்குவதற்கான ஒரு ஊடகமாக மாறியுள்ளது. நேரடி பலன் பரிமாற்றம் கசிவுகளை அடைத்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர உதவியது. அரசாங்கம் இதுவரை நேரடி பலன் பரிமாற்றம் மூலம் ரூ.25 லட்சம் கோடியை மாற்றி உள்ளது,’ என்றார்.