திரைப்படங்களில் பள்ளி பருவ காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என நடிகர் தாமு தெரிவித்துள்ளார்.
காதல் என்ற பெயரில் வற்புறுத்தல், கொலை, பலாத்காரம் என்று பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. தான் காதலிக்கும் பெண் தனது காதலை ஏற்காவிட்டால் கூட ஆசிட் அடிப்பது, வெட்டி கொலை செய்வது என்று பல்வேறு கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு தப்பியோடிய சதீஷ் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகர் விஜய் ஆண்டனி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மதுரையில் நடிகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மாணவி சத்யா கொலை செய்யப்பட்டதை நினைத்தால் பெண் குழந்தைகளை பெற்ற ஒவ்வொரு தந்தையும் மனமும் குமுறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஒழுக்க பழக்கவழக்கங்களை பள்ளி வகுப்பிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் போதைப்பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வை தொடர வேண்டும் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படங்களில் பள்ளி பருவ காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.