தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அருகில் பெரிய கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரையின் அருகில் நடை பயிற்சி மேடை, சிறுவர் பூங்கா, மாதா ஆலயம் உள்ளிட்டவைகள் உள்ளதால் இந்தக் கடற்கரை பகுதிதான் உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு தலமாக உள்ளது. இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
இந்த நிலையில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. மேலும், கடல் அலைகளும் அதிக ஆர்ப்பரிப்புடனும் ஆக்ரோஷ்மாகவும் காணப்பட்டது. இதனால், கடற்கரையின் அருகில் செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டனர். மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாமல் தங்களின் படகுகளை கரைகளிலேயே நிறுத்தினர்.

தூரத்தில் நின்றபடி பச்சை நிறத்தில் மாறிய கடல் அலைகளை பார்த்தபடியே நின்றனர் பொதுமக்கள். இதுகுறித்து மீன்வள ஆய்வாளர்களிடம் பேசினோம், “கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள வாளை தீவு, தலைவாரி தீவு பகுதியில் கடல் நீர், இதைப் போல பச்சை நிறத்தில் மாறியது. பாசி வேகமாகப் பரவியதால் அந்தப் பகுதி முழுவதுமே பச்சை பசேலெனக் காட்சி அளித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் கடல் நீர் இவ்வாறு பச்சை நிறத்தில் மாறுகிறது.
இதற்கு, ‘நாக்டிலுகா சைலன்டிலன்ஸ்’ என்று பெயர். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடிய செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்த பாசிப்படலம் வேகமாக கடற்பகுதியில் வருகிறது. இந்தப் பாசியில் சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு வகைகள் உண்டு.
இதில், தற்போது பச்சை நிறப் பாசிகள் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன. மழைக்காலங்களில் மழைநீர், கடலில் கலக்கும் போது அதிலிருந்து கிடைக்கும் சத்துக்களை உட்கொண்டு இந்த வகைப்பாசிகள் வளரக்கூடியது. இந்த வகை கடல் பாசியில் இருந்து ’அம்மோனியா’ என்கிற நச்சுத்தன்மை வெளி வருவதுடன், இந்த பாசிகள் வளரக்கூடிய பகுதிகளில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால், சில இடங்களில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகிறது.

இந்த வகைப்பாசிகள், அரபிக் கடலில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உற்பத்தியாகிறது. அரபிக்கடலில் இருந்து நீரோட்டத்தின் காரணமாக மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு வருவது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாசிகளால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், குறிப்பிட்ட சில மீன் இனங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்க வாய்ப்புள்ளது” என்றனர். கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.