விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், ஆறாவது முறையாக இந்த தீபாவளிக்கும், பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் மருதுநகரிலுள்ள “லைட் ஆப் லைஃப்” குழந்தைகள் காப்பகம், சேத்தூரிலுள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட மூன்று காப்பகங்களிலும் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் 211 பேரை, ராஜபாளையத்தில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளிக்கடைக்கு அழைத்துவந்து, அவர்களுக்குப் பிடித்த புத்தாடையை வாங்கிகொடுத்துள்ளார்.
அதன் பின்னர், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ மகிழ்ச்சியில் திளைத்த அந்தக் குழந்தைகளிடம் உரையாடினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “நீங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; அனைவரின் ஆதரவையும் பெற்றவர்கள். உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே.” என்று கூறி, அவரவர் காப்பகங்களுக்கு குழந்தைகளை பத்திரமாக அனுப்பிவைத்தார்.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது 11, 12 மற்றும் 13-வது மாத எம்.எல்.ஏ. ஊதியம் ரூ.3,15,000 முழுவதையும், ஆதரவற்ற குழந்தைகளின் தீபாவளி புத்தாடை செலவினங்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார். உள்ளத் தூய்மையுடன் மட்டுமல்லாமல், நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக அமையும் நற்செயல்களை, தங்கப்பாண்டியன் போன்ற மக்கள் பிரதிநிதிகள் செய்துவருவது, மனிதகுலத்துக்கு ஆறுதலாக அமைகிறது.