
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை தற்போது ஆந்திரா சென்றுள்ளது. காஷ்மீர் வரை பாத யாத்திரையாக ராகுல் காந்தி செல்ல திட்டமிட்டுள்ளார். மொத்தம் 150 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் 3,570- கி.மீட்டர் தூரம் நடந்தே சென்று காஷ்மீரில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடா யாத்திரையை நிறுத்தி விட்டு தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்பியும், கோவா மாநில முன்னாள் முதல்வருமான பிரான்சிஸ்கோ சர்தின்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாஜகவை வீழ்த்தும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சி அடிமட்ட அளவில் வளருவதற்கு அவசியமானது. அதேவேளையில், தேர்தல் நடைபெற உள்ளதால் ராகுல் காந்தி அங்கு செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.