புதுடில்லி :பணவீக்கம் சம்பந்தமாக, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளின் பலன், அடுத்த ஐந்திலிருந்து ஆறு காலாண்டுகளில் தெரிய வரும் என, ரிசர்வ் வங்கி பணக் கொள்கை குழு உறுப்பினர் ஜெயந்த் ஆர். வர்மா கூறியுள்ளார்.
நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தை, நான்கு சதவீதமாக பராமரிக்க, ரிசர்வ் வங்கிக்கு அரசு இலக்கு வைத்துள்ளது. இதில் இரண்டு சதவீதம் அதிகமாகவோ; அல்லது, குறைவாகவோ இருக்கலாம்.
அதாவது 2 _ 6 சதவீதத்துக்குள் சில்லரை விலை பணவீக்கத்தை பராமரிக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக பணவீக்கம் இந்த இலக்கை தாண்டி அதிகமாக இருந்து வருகிறது.பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி, கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று, குறுகிய காலக் கடனுக்கான ‘ரெப்போ’ வட்டிவிகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இதையடுத்து, வட்டி தற்போது 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை, ரிசர்வ் வங்கி, மொத்தம் 190 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டியை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்த முடிவுகளின் பலன், இன்னும் ஐந்திலிருந்து ஆறு காலாண்டுகளுக்குள் தெரியவரும் என, வர்மா தெரிவித்துள்ளார்.மேலும் கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் நிச்சயமாக பணவீக்கம் குறையும்.
நாங்கள் மந்தநிலைக்கு பயப்படவில்லை. ஆனால், பொருளாதார வளர்ச்சி நாம் விரும்புவதை விட குறைவாகவும்; பணவீக்கம் விரும்புவதை விட அதிகமாகவும் உள்ளது. இந்நிலை பணக்கொள்கைக்கு சவாலாக உள்ளது. தற்போது பணவீக்கத்துக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். அது கட்டுக்குள் வந்ததும், அதிலிருந்து விலகி, பிறவற்றில்
கவனம் செலுத்துவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement