`ஆதரவற்ற குழந்தைகள் அல்லர், அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள்!' – எம்.எல்.ஏ.வின் நெகிழவைத்த செயல்

ராஜபாளையம் அருகே பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய 3 காப்பகங்களில் உள்ள 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் எடுத்துக்கொடுத்து மாணவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன்.

குழந்தைகள்

இந்த நெகிழ்ச்சியான முயற்சி குறித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பேசினோம்… “ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கடந்த ஐந்து வருடங்களாக தீபாவளிக்கு புத்தாடை வழங்கி வருகிறேன். அதுபோலத்தான் தற்போதும் தொடர்ச்சியாக 6-வது ஆண்டாக அக்குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வழங்க முடிவு செய்யப்பட்டது.

பொதுவாக, புத்தாடை எடுத்துக் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு சரியான அளவில் உள்ளதா, அவர்களுக்கு அந்த ஆடை பிடித்துள்ளதா என்பதை உறுதி செய்ய முடியாது. பண்டிகைக் காலங்களில் நாம் கடைக்குச் சென்று நமக்கு விருப்பமான ஆடைகளை தேர்வு செய்வதைப்போல, அவர்களும் பிடித்தமானதை தேர்வு செய்யவேண்டும் என நினைத்தேன்.

குழந்தைகளுடன்

இதற்காக, மூன்று காப்பகங்களைச் சேர்ந்த குழந்தைகளும், பராமரிப்பாளர்களின் கண்காணிப்பில் ராஜபாளையத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஜவுளிக்கடையில், குழந்தைகளே அவர்களுக்குப் பிடித்தமான துணிவகையினை மகிழ்ச்சியுடன்‌ தேர்வு செய்து கொண்டனர். இதற்கான செலவு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம், எனது 3 மாத எம்.எல்.ஏ. ஊதியத்திலிருந்து வழங்கப்பட்டது.

புத்தாடை

குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே. ஆகவே அனைவரும் சிறந்தமுறையில் கல்வி கற்க வேண்டும் என அந்தக் குழந்தைகளிடம் தெரிவித்தேன். தமிழக அரசு எல்லா இடங்களிலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்கிறது. ஆகவே, அவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்லர், அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள்’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.