சென்னை: ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றம் சாட்டியுள்ள விசாரணை ஆணையம், ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் உள்ளதாகவும், ஜெ.வுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய சசிகலா தடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சசிகலாவின் உறவினரான டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சசிகலா ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு அவர்களிடம் துறை ரீதியிலான விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.
ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையில் தான் போயஸ் கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக ரகசியமாக்கப்பட்டன.
எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள், மேற்பார்வைக்காக வந்ததாகவும் மருந்துகள் எதுவும் பரிந்துரைக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2012ல் ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தபின்னர் இருவரிடமும் சுமூக உறவு இல்லை’ என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த வெளிநாட்டு டாக்டர், டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் ஜெய லலிதாவுக்கு உடனே அஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சுவரை ஏன் அது நடக்கவில்லை?, அதை என் சசிகலா தடுத்தார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் இறந்த நாள் தேதியில் குழப்பம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5ந்தேதி இரவு 11.30மணி என தெரிவித்துள்ளது. ஆனால், சாட்சியங்கள் ஜெயலலிதா டிசம்பர் 4ந்தேதி மதியம் 3.30 மணிக்கே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம்: 600 பக்க விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி…