கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் மாசானம் என்ற கண்ணன்(37). இவர் மது குடிப்பதுடன் சிறு திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாசானம் திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அவரின் மனைவி இசக்கியம்மாள் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் மாசானத்தின் நண்பரான மாதவபுரத்தைச் சேர்ந்த பாலன் என்ற பாலகிருஷ்ணன், பாலனின் நண்பரான விக்னேஷ் ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மாசானத்தை பாலன், விக்னேஷ் ஆகியோர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியதில் மாசானம் நண்பராக இருந்தபோதும் தனது வீட்டில் திருடியதாக பாலன் தெரிவித்துள்ளார். இதனால் அவரை மது குடிக்கலாம் என சுசீந்திரம் பழையாறு பகுதியில் உள்ள சோழந்திட்டை தடுப்பணை அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆள் அரவம் இல்லாத அந்த பகுதியில் மது குடித்துக்கொண்டிருக்கும்போது எனது வீட்டில் ஏன் திருடினாய் என பாலன் கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாலனும், விக்னேஷும் சேர்ந்து மாசானத்தை தாக்கியுள்ளனர். இதில் மாசானம் இறந்துவிட்டார். அவரின் உடலை புதர்களுக்கிடையே போட்டுவிட்டு இருவரும் சென்றுவிட்டனர். இதற்கிடையே மாசானத்தை கொலைசெய்தது பற்றி மது போதையில் பாலன் சிலரிடம் உளறியுள்ளார். இந்த தகவல் போலீஸுக்கு தெரியவந்ததால் பாலனையும், அவரது நண்பரான விக்னேஷையும் கன்னியாகுமரி போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் மாசானத்தை கொலை செய்து அவரின் உடலை வீசிய சுசீந்திரம் பழையாறு பகுதியில் பாலன், விக்னேஷ் ஆகியோரை அழைத்துச் சென்று போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் மாசானத்தின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மட்டுமே கிடந்துள்ளன. உடலை நாய்கள் கடித்து தின்றதால் எலும்புக்கூடு மட்டும் மிஞ்சியிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். எலும்புக்கூடுகளை சேகரித்து மூட்டைகட்டி எடுத்துச் சென்ற போலீஸார் அது மாசானத்தின் உடல்தானா என்பதை உறுதிசெய்ய டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.