புதுடில்லி, புதுடில்லி மகளிர் ஆணைய தலைவர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில மகளிர் ஆணைய தலைவராக பதவி வகிப்பவர் ஸ்வாதி மாலிவால்.
இவர் சமீபத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ஏராளமான பெண்களால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சினிமா தயாரிப்பாளர் சஜித் கான், தனியார் ‘டிவி’ நடத்தும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளார்.
‘அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, புதுடில்லி மாநகர போலீசில் ஸ்வாதி மாலிவால் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
சஜித் கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஏராளமானோர் மிரட்டல் விடுக்கின்றனர். சிலர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுடில்லியில் உள்ள ஸ்வாதி மாலிவால் வீட்டில் நேற்று கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வீட்டின் முன்பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் கதவு, ஜன்னல் ஆகியவை சேதம் அடைந்தன. இந்த தாக்குதல் நடந்த போது ஸ்வாதி வீட்டில் இல்லை.
இதுகுறித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சச்சின் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement