“மந்திரி பதவியில் இருந்து தூக்கிவிடுவேன்" – கேரள கவர்னர் எச்சரிக்கைக்கு என்ன காரணம்?

கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக கவர்னர் ஆரிப் முஹம்மதுகானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்குமான நேரடி மோதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவிலும், லோக் ஆயுக்தாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்த மசோதாவுக்கும் கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் ஒப்புதல் அளிக்காமல் உளார். இந்த நிலையில் கண்ணூர் பல்கலைக்கழகத்தில்நடந்த தேசிய வரலாற்று கருத்தரங்கில் தன்னை தாக்க முயன்றதாக கவர்னர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். ஆளுநரின் குற்றச்சாட்டுக்களுக்கு கேரள அமைச்சர்களும், சி.பி.எம் நிர்வாகிகளும் பதிலடி கொடுப்பது வாடிக்கையாக உள்ளது.

கவர்நர் ஆரிப் முகம்மதுகான் ட்விட்டர்

இந்த நிலையில் கேரள பல்கலைக்கழகத்தில் இருந்து 15 செனட் உறுப்பினர்களை நீக்கி கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் நேற்று உத்தரவிட்டார். இதை உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து உள்ளிட்டவர்கள் விமர்ச்சித்திருந்தனர். இந்த நிலையில் ஆளுநர் ஆரிப் முஹம்மதுகான் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முழு உரிமை உண்டு. ஆனால், அமைச்சர்களின் தனிப்பட்ட அறிக்கைகள் மூலம் ஆளுநர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டால் அவர்களின் பதவியை திரும்பபெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

கேரள பல்கலைக்கழகத்தில் தனது நடவடிக்கையை அமைச்சர் பிந்து விமர்ச்சித்ததை தொடர்ந்தே கவர்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும், கேரள அரசுடன் நேரடி மோதலை கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் கையில் எடுத்துள்ளதாகவும் இந்த செயல்பாடு பார்க்கப்படுகிறது. கேரள ராஜ்பவனில் இருந்து வெளியான அசாதாரண அறிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முதல்வர் கேட்டுக்கொண்டால் மட்டுமே அமைச்சர்களை பதவியில் இருந்து கவர்னரால் நீக்க முடியும். ஆனால், கவர்னர் சுயமாக அமைச்சரை நீக்க முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.