ஆப்கானிஸ்தான்: கை, கால்களை கட்டிப்போட்டு 27 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டு வருகிறது.

இந்த கிளர்ச்சி படைக்கும் தலீபான்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த சண்டையில் கிளர்ச்சி படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலீபான்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட நபர்கள் 27 பேரை கை, கால்களை கட்டிப்போட்டு தலீபான்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கடந்த மாத இறுதியில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லாப நோக்கமற்ற விசாரணை அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இது அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து தலீபான் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எனயதுல்லா கவாரஸ்மி கூறுகையில், “சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. விசாரணை நடந்து வருவதால் இதுபற்றிய கூடுதல் விவரங்களை வழங்க முடியாது” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.