சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..! ஏழுமலை வெங்கடேசன்…

சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..!

சிறப்பு கட்டுரை: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…

ஜெயலலிதா மரணம் விவகாரத்தில், விசாரணைக் கமிஷனின் அறிக்கைக்குப் பிறகு  இப்போது சசிகலாவை நோக்கித்தான் பெரும்பாலோனோர் கைகள் நீள்கின்றன.

சந்தேக கண்ணோட்டத்தில், சசிகலா பிரதான புள்ளியாகவே இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் ஒத்துழைப்பு  இல்லாமல் வெறும் சசிகலாவால் மட்டுமே 75 நாள் மர்மத்தை கடத்திச் சென்று இருக்க முடியாது.

மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சர் என்றாலும், மருத்துவமனையில் தளர்ந்து போய் விட்ட நிலையில் ஜெயலலிதாவின் சூழல் நிலைமையே வேறு. அவரையும் மாநில அரசாங்கத்தையும்  தன் கட்டுக்குள் கொண்டுவர இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு. ஒன்று சசிகலா, இன்னொன்று மாநில ஆளுநர்.

மாநில முதலமைச்சர் சுயநினைவோடு இருக்கிறாரா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய அரசியல் சாசன சட்ட  கடமையை, ஆளுநர்  கையில் எடுத்தால் சசிகலாவெல்லாம் எதிரே நிற்க முடியாது. சசிகலாவே நிற்க முடியாது என்கிற போது அமைச்சர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் எல்லாம் எந்த லெவலுக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ ஹாஸ்பிடல் நிர்வாகம் மட்டும் தன்னிச்சையாக செயல்பட்டு விட முடியுமா?

ஜெயலலிதாவை உடனிருந்து கவனித்துக் கொள்ளும் நெருங்கிய தோழி என்பதால் அவர் பேச்சை, ஆளுநரும் சரி அப்போலோ ஹாஸ்பிடல் நிர்வாகமும் சரி,  ஒரு வாரம் இரண்டு வாரம் கேட்டிருக்கலாம். ஆனால் 75 நாட்களுக்கு எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் ஆளுநரும் அப்பல்லோவும் தலையாட்டினார்கள் என்பதையெல்லாம் நம்பவே முடியாது.

மத்திய அரசின் மேற்பார்வையாளராக ஆளுநரும் தன்னிச்சையாக செயல்பட்டு விடமுடியாது. டெல்லிக்கு உண்மையான நிலைமை சொல்லப்பட்டு, அங்கிருந்து வந்த உத்தரவுகள்படிதான் அவர் நடந்திருக்க முடியும்.

மோடியும் ஜெயலலிதாவும் நெருங்கிய நண்பர்கள் என்றபோதிலும் அப்போலோ பக்கம் மோடி எட்டிகூட பார்க்கவில்லை. நேரில் விசாரிக்கக் கூடிய அளவுக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லை என்கிற கோணத்திலும் இதனைப் பார்க்கலாம்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு  உட்பட எத்தனையோ பேர் அப்போது ஹாஸ்பிடலுக்கு வந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட வந்தார். அவர்களுக்கெல்லாம் அப்போது அங்கு யாரால் என்ன எடுத்துச் சொல்லப்பட்டது என்பதை எவரும் வெளியே தெரிவிக்கவில்லை.

அப்போது வெளியே சொல்ல வேண்டாம் என்று தவிர்த்து இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா இறந்த பிறகும் அது பற்றி எங்குமே யாரும் வாயைத் திறக்கவில்லை. “நான் அப்போலோ ஹாஸ்பிடல் வந்தபோது எனக்கு இன்னார் இப்படி விளக்கம் தந்தார்” என்று ஒருவரும் எந்த தருணத்திலும் திருவாய் மலரவில்லை.

அலசியபடியே இருந்தால் இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக அலசினால் இரண்டே விஷயங்கள்தான்.

ஒன்று தனது உடல்நிலை பற்றி வெளியே எள்ளளவும் தெரியவே கூடாது என்று ஜெயலலிதா கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்து யாரும் அதை மீற முடியாத நிலைமை இருந்திருக்கலாம். ஜெயலலிதாவை பொறுத்தவரை அப்படி செய்யக் கூடியவர்தான். அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றெல்லாம் கூறிவிட முடியாது.

இரண்டாவது அவரது உடல்நிலை முழுவதுமாக தளர்ந்துவிட்ட பிறகு, சதித்திட்டம் பிறந்திருக்கலாம். இதனை ஒரு தரப்பு மட்டுமே செய்திருக்க முடியாது.. முதன்முதலாக இறங்கிய சதிகார தரப்புக்கு மற்ற தரப்புகள் குற்ற உடந்தையாக உள்ளே வந்து கை கொடுத்திருக்க முடியும்.

சரி ஓபிஎஸ் விவகாரம்.?

ஓபிஎஸ்சையெல்லாம் சசிகலா அண்ட்கோ ஒரு பொருட்டாக மதித்திருக்காது. முதலமைச்சர் பதவியை விட்டு விலகும் படி சசிகலா தரப்பு சொன்னதும் அவருக்கு கோபம் வந்துவிட்டது.

உடனே ஜெயலலிதா விவகாரத்தில் மர்மம் என சசிகலா மீது படிந்திருந்த சந்தேக ரேகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தர்மயுத்தம் என கம்பு சுற்ற ஆரம்பித்தார். எடப்பாடி பழனிச்சாமி உடன் சமாதானம் ஆகி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் பதவி கிடைத்த பிறகு தர்மயுத்தம் நோக்கம் ஒழிந்து போனது.

எடப்பாடி பழனிச்சாமி உடன் மோதல் வெடித்தபோது மீண்டும் சசிகலாவே மேல் என்று அவர் பக்கம் போகத் தொடங்கினர் ஓபிஎஸ், அவ்வளவுதான். சசிகலாவை எதிர்த்து தானே தர்மயுத்தம் தொடங்கினீர்கள் என்று கேட்டதற்கு, சசிகலா நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காகத்தான் விசாரணை கமிஷன் வைக்கச் சொன்னேன் என்று காமெடி செய்தவர் ஓபிஎஸ்.

சரி எடப்பாடி பழனிச்சாமி?

ஓபிஎஸ் கோரிக்கை வைத்தபடி விசாரணை கமிஷனை அமைத்து விட்டு அதோடு ஜெயலலிதா விவகாரத்தை மறந்து விட்டார் ஈபிஎஸ். ஆட்சியில் உட்கார வைத்த சசிகலாவும் தேவையில்லை, கவிழ்க்க முற்பட்ட ஓபிஎஸ்சும் தேவையில்லை என்று தீர்மானித்துக் கொண்ட அவர், 4 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இதற்காக ஈபிஎஸ் கொடுத்த விலைதான், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி. தேற மாட்டோம் என்று தெரிந்த பிறகும் வைத்த கூட்டணி. சட்டமன்றத் தொடரிலும் கைவிட மனம் வரவில்லை.  அதே நேரத்தில் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை மட்டும் ஈபிஎஸ்சை விட்டுப் போகவில்லை. அதற்கு அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டு வந்தால்தான் முடியும் என்பதால் கட்சியை முழுமையாக கைப்பற்றும் வேலைக்கு அவர் போய்விட்டார்.

சரி நடப்பு விஷயத்துக்கு வருவோம்.

எம்ஜிஆரை சுற்றியிருந்தவர்கள் உண்மையான ரத்தத்தின் ரத்தமான விசுவாசிகள். அதனால்தான் அவர் முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு  உடல் நலிவுற்ற போது தனிவிமானம் பெற்று அமெரிக்காவுக்கே கொண்டுபோய் சிகிச்சை பெற வைத்து காப்பாற்றி கொண்டு வந்தார்கள்.

எம்ஜிஆர் வேறு. ஜெயலலிதா வேறு பல விஷயங்களில் எம்ஜிஆரின் பண்புகளோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. இப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு உண்மையான விசுவாச பாக்கியம் கிடைக்காமல் போய்விட்டது.. ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் குற்றவாளி ஒருவர் அல்ல, ஒரு பெரும் கும்பலே..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.