வாக்குவாதம் முற்றியதால் கத்திக்குத்து: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

குழந்தைகள் ஆட்டோவில் விளையாடியதை தட்டிக் கேட்டவரை கொலை செய்ய முயற்சித்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் தெரு அருகே கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அப்பகுதியில் நின்ற ஆட்டோவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை சரவணன் (35) என்பவர் கண்டித்துள்ளார்.

தன் குழந்தைகளை கண்டித்த சரவணனிடம் குழந்தையின் தந்தை குமார் (45) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் குமாரை சரவணன் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த குமார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி சுமதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் சரவணன் மீது கொலை முயற்சி, அவதூறாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட 5 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்து விசாரணை நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் சென்னை மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பகவதி ராஜ் ஆஜராகி, குற்றவாளி குழந்தைகள் முன்னிலையில் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்றும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கு பல வித கேள்விகளை எழுப்புகிறது. குழந்தைகள் விளையாடுவதை கண்டிக்க இந்த அளவு ஆவேசம் தேவையா என்ற கேள்வி எழுகிறது. வாக்குவாதம் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது எத்தனை பேருடைய வாழ்க்கையை பலியாக்கி விடுகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.