Exclusive: "அப்துல் கலாம் பயோபிக்கை நிச்சயம் நான்தான் இயக்குவேன்!"- நகைச்சுவை நடிகர் தாமு

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமடைந்தவர் தாமு. இவர் விஜய்யுடன் கில்லி என்ற படத்தில் நடித்த `ஓட்டேரி நரி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரம் இன்று வரை அனைவராலும் ரசிக்கக்கூடிய வகையில் இருந்துவருகிறது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீதுள்ள பற்று காரணமாக, திரைப்படத் துறையிலிருந்து சற்று ஒதுங்கி, கடந்த 14 வருடங்களாக அப்துல் கலாம் போதித்த பத்துக் கட்டளைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்துவருகிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் அப்துல் கலாம் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு வந்து மரியாதை செய்துவருகிறார்.

நகைச்சுவை நடிகர் தாமு விகடனுக்கு பேட்டி அளித்த போது…

அதன்படி அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடத்திற்கு வந்த தாமுவிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் விகடனுக்கு உற்சாகமாக பதில் அளித்தார்.

“மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?”

“படங்களில் நடிப்பதிலிருந்து நான் விலகவில்லை. அதுதான் என் தொழில். நடிப்பிற்கு ஒரு ‘கமா’ போட்டுவிட்டுதான் வந்திருக்கிறேன். அடுத்த ஆண்டு கண்டிப்பாக என்னைத் திரைப்படங்களில் நீங்கள் பார்க்கலாம்.”

“நகைச்சுவையாளராக இருந்து தற்போது கல்வியாளராக மாறியுள்ளீர்கள், இனிவரும் கதாபாத்திரங்களை எப்படித் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளீர்கள்?”

”ஆம், நான் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் மக்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் நான் ‘கில்லி’ படத்தில் நடித்த ‘ஓட்டேரி நரி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரம் ஆழமாகப் பதிந்துவிட்டது. தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியில் நான் ஒரு கல்வியாளராக அடையாளம் காணப்பட்டுள்ளேன். இதனால் கதாபாத்திரங்களை மிகக் கவனமாகப் பார்த்துதான் நடிக்க உள்ளேன். இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நடிக்க வேண்டியதுதான் என்னுடைய கடமை, அதுதான் என்னுடைய தொழில் தர்மம். அதில் எந்த ஒரு தவறான விஷயங்களையும் மக்களிடம் கொண்டு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.”

திரைப்பட நடிகர் தாமு

“அப்துல் கலாம் மீது பற்றுள்ள நீங்கள் அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குவீர்களா?”

”கண்டிப்பாக, இதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அவருடைய சீடன் நான். தமிழில் அவருடைய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை நான் கண்டிப்பாக இயக்குவேன். அது என்னுடைய மிகப்பெரிய கடமையாகவும் பொறுப்பாகவும், எனக்குக் கிடைக்கும் பாக்கியமாகவும் நான் கருதுகிறேன்.”

“திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்பு, மீண்டும் கல்வியாளராகப் பணியைத் தொடர்வீர்களா?”

”இதில் சந்தேகமே வேண்டாம். மாணவர்களைச் சந்திக்கக் கூடிய திருப்தி திரைப்படங்களில் கிடைக்காது. திரைப்படங்களில் நடிக்கின்ற திருப்தி வேறு, மாணவர்களைச் சந்திக்கின்ற திருப்தி வேறு. என்னை ஒரு குரு ஸ்தானத்தில் பார்க்கிறார்கள். மாணவர்கள் மற்றவர்களின் ஆட்டோகிராபை வாங்குபவர்களாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு மாணவனின் கையெழுத்தையும் ஆட்டோகிராப்பாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்துக்கொண்டிருக்கிறேன். அந்தப் பயணம் எப்போதும் தொடரும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.