புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (19). அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கல்லூரி முடிந்து, காரைக்குடி அரசு கலைக்கல்லூரி வழியாக, ரயில்வே ஊழியரான கோபாலகிருஷ்ணன் என்பவரது பைக்கில் சென்றார். அப்போது, அரசுப் பேருந்துக்காக சாலை ஓரத்தில் ஏராளமான மாணவிகள் காத்திருந்துள்ளனர். அந்நேரம், மாணவிகளின் முன்பு பைக்கில் எழுந்து நின்று சாகசம் செய்யலாம் என்று மகேஸ்வரன முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்போது, மகேஸ்வரன் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். இதனை அவரின் நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, வீடியோ வைரலானது.

இதையடுத்து, பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்துகொண்ட கோபாலகிருஷ்ணன், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த ஹரிஹரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது அழகப்பாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனர். இதில், காவல் நிலையத்தில் சரணடைந்த மூவரும் ஜாமீனில் வெளியே சென்றனர். சாகசத்தில் ஈடுபட்ட மகேஸ்வரன் மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாட, நீதிபதிகளோ, ஒரு வாரம் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் போக்குவரத்தை சரிசெய்யும் பணியை செய்ய வேண்டும் என்று மகேஸ்வரனுக்கு நூதன தண்டனை வழங்கினர்.
இதையடுத்து, மகேஸ்வரனும், தான் சாகசம் செய்த கல்லூரி சாலையிலேயே போக்குவரத்து போலீஸாருடன் சேர்ந்து போக்குவரத்தினை சரி செய்து வருகிறார். அதோடு, தான் செய்ததைப் போல யாரும் சாலையில் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறி பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கி சின்சியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

போக்குவரத்துப் போலீஸாரிடம் கேட்டபோது, “இங்குள்ள பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இதற்கிடையேதான், சாகசங்கள் என்ற பெயரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அதில் சிலர் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சாலையில் அடிபட்டு உயிரிழப்பார்கள்.
இந்த மாதிரியான தண்டனைகள் கொடுக்கும்போதுதான், போக்குவரத்தை சீரமைக்க போலீஸார் படும் சிரமம், சாகசக்காரர்களால் என்ன மாதிரியான பிரச்னை மக்களுக்கு ஏற்படுகிறது என்பது நேரடியாகப் புரியும்” என்றனர்.