மப்பில் தூங்கிய மனைவி கொலை கணவர் விடுதலை: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

‘மப்’பில் துாங்கிய மனைவி கொலை கணவர் மீது தப்பில்லை என விடுதலை

பெங்களூரு : பண்டிகையின் போது, உணவு சமைக்காமல், மது அருந்திவிட்டு உறங்கிய மனைவியை கொலை செய்த கணவரது ஆயுள் தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

சிக்மகளூரு முடிகரேயை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவர், ஏற்கனவே திருமணம் செய்து, மனைவியை பிரிந்து விட்டார். பின், ராதா, 33, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

மது பழக்கத்துக்கு அடிமையான ராதா, சில ஆண்டுகளுக்கு முன், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று குடித்து விட்டு, உணவு தயார் செய்யாமல் உறங்கி விட்டார்.

வெளியே சென்றிருந்த சுரேஷ், வீட்டுக்கு வந்தபோது, மது அருந்தி விட்டு உறங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து ஆத்திரமடைந்தார். அவரது தலையில் கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கீழ் நீதிமன்றம், 2017 நவம்பரில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சுரேஷ் அப்பீல் செய்திருந்தார்.

விசாரணை நடத்திய நீதிபதிகள் சோமசேகர், சிவசங்கரே கவுடா அமர்வு அளித்த தீர்ப்பு:

குற்றம் சாட்டப்பட்டவர், கொலை செய்ததன் நோக்கத்தை அரசு தரப்பால் விளக்க முடியவில்லை.

அரசு தரப்பு சாட்சியங்களில் இருந்து, கொல்லப்பட்ட பெண் உணவு தயாரிக்கவில்லை. இது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க துாண்டிஉள்ளது.

அவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் செயல், ஐ.பி.சி.,யின் 300வது பிரிவின் விதிவிலக்கு- 1ன் வரம்பிற்குள் வருகிறது. எனவே, அவர் செய்ததை கொலையாக கருத முடியாது.

மாறாக, இது குற்றமற்ற கொலையாக கருதப்பட வேண்டும். அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்டவர் ஏற்கனவே ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து விட்டதால், அவர் மீது வேறு எந்த வழக்கும் இல்லாததால், அவரை உடனடியாக விடுவிக்க, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பெண்ணிடம் மொபைல் போன் பறித்த சிறுவர்கள் கைது

காரைக்கால் : காரைக்காலில் பெண்ணிடம் மொபைல்போன் பறித்துச் சென்ற சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் கோட்டுச்சேரி ராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன் மனைவி தமிழ்ச்செல்வி. இவர் அக்குபஞ்சர் தெரபிஸ்ட் பயிற்சி பெற்று வருகிறார்.

கடந்த 15ம் தேதி இரவு பணி முடிந்து கோட்டுச்சேரி மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திலிருந்து தமிழ்செல்வி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பின்தொடர்ந்து பைக்கில் வந்த மூவர் தமிழ்ச்செல்வியின் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். சுதாரித்த தமிழ்செல்வி அவர்களை தாக்கியபோது, அவரது கையிலிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போனை பறித்துக் கொண்டு மூவரும் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசில் தமிழ்செல்வி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளியை தேடி வந்தனர். நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் திருவேட்டக்குடி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். ஒரே பைக்கில் வந்த மூவரை போலீசார் விசாரித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் கழனிவாசல் பகுதியை சேர்ந்த தினேஷ்(21), மற்ற இருவர் 17 மற்றும் 14 வயது சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. மூவரும் தமிழ்ச்செல்வியிடம் மொபைல் போன் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.

மூவரையும் கைது செய்து, மொபைல் போன் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூதாட்டியிடம் நுாதன முறையில் இரண்டரை சவரன் நகை ‘அபேஸ்’

latest tamil news

புதுச்சேரி ; புதுச்சேரியில் துணிக்கடைக்கு வந்த மூதாட்டியை நுாதனமாக ஏமாற்றி நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார்,53; இவரின் தாய் ரங்கநாயகி,72; நேற்று முன்தினம் புத்தாடை வாங்க ரங்கநாயகியை குடும்பத்தினர் நேரு வீதி கடைத்தெருவுக்கு அழைத்து சென்றனர்.

அங்குள்ள துணிக்கடை அருகே நின்றிருந்த ரங்கநாயகியிடம் மர்ம நபர் ஒருவர், மூதாட்டிகளுக்கு தனது நகை கடையில் ஒரு கிராம் கம்மல், மூக்குத்தி இலவசமாக வழங்குவதாக தெரிவித்தார்.

அதை பெற வேண்டுமெனில், நகை ஏதும் அணிந்திருக்க கூடாது என கூறினார்.

இதை நம்பிய மூதாட்டி, தான் அணிந்திருந்த இரண்டரை சவரன் செயினை கழற்றினார்.

அதை பாதுகாப்பாக பேப்பரில் சுற்றித் தருவதாக வாங்கிய மர்ம நபர், வெறும் பேப்பரை மட்டும் மடித்து கொடுத்து விட்டு நகையுடன் தலைமறைவானார்.

இது பற்றி சம்பத்குமார், பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்தனர்.

நேரு வீதியில் சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மூதாட்டியிடம் மோசடி செய்த நபருடன் கூட்டாளிகள் இருவர் செல்வது தெரியவந்தது.

அதனடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

லாரி எரிந்து ஓட்டுனர் பலி

latest tamil news

திருவள்ளூர், ; திருவள்ளூர் அடுத்த, நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன், 48. லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம், வேலுார் அரசு மண் குவாரியில் இருந்து மணல் எடுத்துக் கொண்டு, திருவள்ளூர் நோக்கி இவர் வந்து கொண்டிருந்தார்.

நாராயணபுரம் அருகில் மணலை இறக்கிய போது, எதிர்பாராதவிதமாக, மேலே இருந்த மின் ஒயரில் லாரியின் மேல்பாகம் உராய்ந்தது. இதில் லாரி தீப்பற்றி எரிந்ததும், அருகில் இருந்தவர்கள், ஓட்டுனரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.

தந்தைக்கு மிரட்டல் தாயை கொன்றவர் கைது

வேளச்சேரி ; வேளச்சேரி, நேருநகரை சேர்ந்தவர் லட்சுமி, 48. கணவர், ராமலிங்கம். இவர்களது மகன் மூர்த்தி, 33, மகள் செல்வி, 30. மூர்த்தி குடிப் பழக்கம் கொண்டவர்.

கடந்த, 2019, செப்., 9ம் தேதி இரவு, மது குடித்து வீட்டுக்கு சென்ற மூர்த்தி, தாய் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.

இதில், லட்சுமியை, காய் வெட்டும் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். வேளச்சேரி போலீசார், மூர்த்தியை கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த நிலையில், நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நடக்க இருக்கிறது.

லட்சுமியின் கணவர் ராமலிங்கம், மகள் செல்வி ஆகியோர் சாட்சி கூற தயாராக இருந்தனர்.

இவர்களை தொடர்பு கொண்ட மூர்த்தி, சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவதாக அடிக்கடி மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்படி, வேளச்சேரி போலீசார், நேற்று, மூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தந்தம் திருட்டு; ஒருவர் கைது

கோவை; தடாகம் அருகே இறந்த யானையின் உடலில் இருந்து தந்தம் திருடப்பட்ட வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடாகம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன், 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. சம்பவ இடத்தில், கோவை வனத்துறை கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையில் இறந்த யானையின் உடல் கூறாய்வு நடந்தது. இதில், யானை இறந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியிருப்பதும், அதன் வலது பக்க தந்தத்தை சிலர் உருவி எடுத்துச் சென்றுள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக, வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை வனச்சரகர் அருண்குமார் கூறுகையில், ”தந்தம் திருடு போன வழக்கில், உள்ளூரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் தந்தத்தை திருட முயற்சித்ததாக ஒப்புக் கொண்டார். இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்ததும், குற்றவாளியின் முழுவிபரங்கள் வெளியிடப்படும்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.