அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் மேற்கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டர் காலை 10.45 மணியளவில் மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், சாலை வசதி இல்லாததால் ஹெலிகாப்டர் மூலமும் வனப்பகுதி விரைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை வீரர்கள் பயணித்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
“அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து மிகவும் கவலையளிக்கும் செய்தி கிடைத்தது. எனது ஆழ்ந்த பிரார்த்தனைகள்” என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 10-ம் தேதி ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மலை மீது விபத்துக்குள்ளானது. கடந்த 4 நாட்களுக்குள் 2வது முறையாக ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றுள்ளது.