டேராடூன்: அரசு பயணமாக உத்தராகண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் வழிபாடு செய்தார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் டேராடூனில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாலி கிராண்ட் விமானநிலையம் சென்ற பிரதமரை மாநில ஆளுநர் லெப்டினட் ஜெனரல் குர்மித் சிங், முதல்வர் புஸ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் அஜய் பட் ஆகியோர் சென்று வரவேற்றனர்.
பின்னர் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு செய்தார். வழிபாட்டின் போது, மலைவாழ் மக்களின் வெள்ளை நிற பாரம்பரிய உடை அணிந்திருந்தார். அதில் ஸ்வஸ்திக் முத்திரை எம்ராய்டரி செய்யப்பட்டிருந்தது. பிரதமர் ஆரோக்கியத்திற்காகவும், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவும் கோயில் பூசாரி வழிபாடு நடத்தினார். அதன்பின்னர் பிரதமர் மோடி, கவுரிகுண்ட் – கேதார்நாத் இடையிலான 9.7 கிமீ தூரத்தில் செயல்படுத்தப்பட இருக்கும் ரோப்கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த ரோப்கார்கள் மூலம் பக்தர்கள் கவுரிகுண்டிலிருந்து 30 நிமிடங்களில் கேதார்நாத்தை அடைந்துவிட முடியும். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஆதி குரு சங்கராச்சாரியாரின் சமாதிக்கு சென்று சிறிது நேரம் அங்கு இருந்தார். அதே போல் பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று பிரதமர் வழிபாடு நடத்தினார்.
வழிபாட்டின் போது பிரதமர் மோடி அணிந்திருந்த மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற “பஹடி” கையினால் செய்யப்பட்ட எம்ரியாடரி வேலைப்பாடு நிறைந்திருந்தது. அது பிரதமர் சமீபத்தில் இமாச்சலப்பிரதேசம் சென்ற போது அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது அதனைப் பெற்றுக் கொண்ட பிரதமர் ஆடையை வழங்கிய பெண்களிடம், தான் அடுத்ததாக செல்லும் முதல் மலைப்பிரதேச பயணத்தின் போது இந்த உடையை கட்டாயம் அணிவேன் என்று தெரிவித்திருந்தார்.
மதியம், கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் ரூ.3,400 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் சாலை மற்றும் ரோப்கார் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய பின்னர் மானா கிராமத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இந்த இரண்டு நாள் பயணத்தில் பிதரமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி பிரசித்தி பெற்ற இந்த இரண்டு கோயில்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் இருந்தது. பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு 6வது முறையாகவும், பத்ரிநாத் கோயிலுக்கு இரண்டாவது முறையாகவும் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | PM Narendra Modi performs ‘puja’ at the Kedarnath Dham
(Source: DD) pic.twitter.com/9i9UkQ5jgr
— ANI (@ANI) October 21, 2022