சிவகங்கை: சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி, அவரது தாய் பலியாயினர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே நெஞ்சத்தூரை சேர்ந்தவர் குமரேசன், இவரது மனைவி நிவேதா (20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் மூலம் நெஞ்சத்தூரிலிருந்து நிவேதா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வரப்பட்டார். அவருடன் நிவேதாவின் தாய் விஜயலெட்சுமி (55), உறவினர் சத்யா உடன் வந்தனர்.
4.30 மணிளவில் இளையான்குடி – சிவகங்கை சாலையில் செங்குளம் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிவேதா, விஜயலெட்சுமி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தியேலேயே உயிரிழந்தனர். சத்யாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஆம்புலன்சை ஒட்டி வந்த டிரைவர் மலையரசன், மருத்துவ பணியாளர் திருச்செல்வி இருவரும் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இருவருக்கும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல், நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த அவ்வாகனத்தில் இருந்த 3 நபர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.