மெல்போர்ன்,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெல்போர்னில் மோதுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி திணறடித்தார். அவரது பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொள்வதற்கு ஏற்ப கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியில் கவனம் செலுத்தினார்.
இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்களின் வலை பயிற்சியின் போது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது. பயிற்சியில் முகமது நவாஸ் ஓங்கி அடித்த ஒரு பந்து, அருகில் நின்று கொண்டிருந்த பேட்ஸ்மேன் ஷான் மசூத்தின் தலையை தாக்கியது. அப்போது அவர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. வலியால் துடித்த மசூத் அப்படியே மைதானத்தில் சுருண்டுவிழுந்தார்.
இதனால் சக வீரர்கள் ஒரு கனம் அதிர்ச்சிக்குள்ளானார்கள். உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு ‘ஸ்கேன்’ பரிசோதனை எடுக்கப்பட்டது.
இதில் தலைக்குள் அதிர்வு அறிகுறி எதுவும் தென்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அவர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் தான்.