பின்வாங்கிய பென்னி மோர்டாண்ட்… பிரிட்டன் புதிய பிரதமரானார் ரிஷி சுனக்!

பிரிட்டன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது அடுத்தடுத்து பிரதமரை மாற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளியிருக்கிறது. லிஸ் டிரஸின் வியூகங்கள் எதுவும் எடுபடாத நிலையில் அமைச்சரவையில் இருந்து பலரும் விலகத் தொடங்கினர். அவருக்கான ஆதரவு குறைந்ததால் பதவியேற்ற 45வது நாளில் ராஜினாமா செய்தார். இதனால் அடுத்த பிரதமர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதேசமயம் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மீது அதிருப்திகள் உண்டானது. இதனை தவிர்க்கும் வகையில் விரைவாக புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சூனக், பென்னி மோர்டாண்ட் ஆகியோர் ஆர்வம் காட்டினர். இதில் போரிஸ் ஜான்சன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் ரேஸ்: புதிய யுக்தியை கையாளும் பென்னி மோர்டான்ட்!

இதனால் இருமுனைப் போட்டியானது. ரிஷி சூனக், பென்னி மோர்டாண்ட் ஆகியோருக்கு ஆதரவாளர்கள் அதிகரிக்க தொடங்கினர். இதற்கிடையில் வெள்ளையர் அல்லாத ஒருவரை பிரதமராக தேர்வு செய்ய கன்சர்வேடிவ் கட்சி முன்வருவது சந்தேகம் எனக் கூறப்பட்டது. ஆனால் வரலாறு மாறத் தொடங்கியது. ஒருகட்டத்தில் ரிஷி சூனக் முன்னிலையில் இருந்தார்.

எனவே பென்னி மோர்டாண்ட் தன்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் பிரதமர் பதவிக்கான ரேஸில் இருந்து விலகுவதாக பென்னி மோர்டாண்ட் தெரிவித்தார். இதனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார்.

விரைவில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முன்வந்து புதிய அரசை அமைக்குமாறு ரிஷி சூனக்கிடம் வலியுறுத்துவார். அதன்பிறகு புதிய பிரதமர் பதவியேற்பார். இரண்டு மாதங்களில் இங்கிலாந்து காணப் போகும் மூன்றாவது பிரதமர் ரிஷி சூனக்.

பிரிட்டன் பிரதமர் தேர்தல்: மறுபிரவேசம் எடுக்கும் போரிஸ் ஜான்சன்?

1980ஆம் ஆண்டு பிறந்த ரிஷி சூனக், இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷிதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். 42 வயதாகும் இவர், கடந்த 200 ஆண்டுகளில் மிக இள வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.