நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளி பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தீபாவளி என்றால் பட்டாசு தான். இருந்தாலும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு கொஞ்சம் அச்ச உணர்வும் இருந்து கொண்டேதான் இருக்கும். மக்கள் பட்டாசு வெடிக்கும் போது நிறைய தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் தீபாவளி கொணடாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் தீ விபத்துகள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்று தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.