அமெரிக்காவில் உள்ள கோவிலில் 87 அடி உயர கோபுரம் திறப்பு

நியூயார்க் : அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேஷ்வரா கோவிலில், 87 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கோபுரம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான வெங்கடேஷ்வரா கோவில் உள்ளது. 2009ல் இந்த கோவில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கோவிலில் 87 அடி உயரத்தில் பிரமாண்ட கோபுரம் கட்டுவதற்கான பணி, 2020ல் துவங்கியது. கொரோனா காரணமாக தடைபட்டிருந்த இந்த பணி, தற்போது முடிவடைந்து நேற்று பிரமாண்ட கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு கரோலினா மாகாண கவர்னர் காரி கூப்பர் இந்த கோபுரத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ”இது, வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். உங்கள் கவலைகளை வெளியில் விட்டு விட்டு, சிறிது நேரம் பயபக்தியுடன் கோவிலுக்குள் நடந்து செல்வது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். கோவிலில் இருந்து வெளியேறும்போது ஆத்ம திருப்தி ஏற்படுவதை கண்டிப்பாக நீங்கள் உணரலாம்,” என்றார்.

கோவில் அறக்கட்டளை தலைவர் ராஜ் தோடகுரா கூறியதாவது: கோபுரம் என்பது, கடவுளின் பாதம் போன்றது. பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கு முன், இறைவனின் பாதங்களில் பணிந்து, தங்கள் கவலைகள் அனைத்தையும் விட்டுவிடுகின்றனர் என்பது ஐதீகம்.

இந்த சிறப்பு மிக்க கோபுரம், அமெரிக்கா வாழ் இந்தியர்களில் பெருமை மிகு கலாசாரமாக இருக்கும். அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளிடமிருந்து வந்த நன்கொடை வாயிலாக இந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.