20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து-இலங்கை இன்று மோதல்

சிட்னி,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் சிட்னியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் (குரூப்1) மல்லுகட்டுகின்றன.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து தனது தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தற்போது 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்துக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், டிவான் கான்வே, பின்ஆலென், கிளென் பிலிப்ஸ், பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். இதே சிட்னியில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 200 ரன்கள் குவித்து நியூசிலாந்து மலைக்க வைத்தது. அந்த அனுபவம் நியூசிலாந்துக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் சாம்பியனான தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. இலங்கைக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா மோதல் போன்றது. தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா சூப்பர் பார்மில் உள்ள நிலையில் மிடில் வரிசை தடுமாற்றம் வலுவான ஸ்கோரை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதை சரி செய்ய தனஞ்ஜெயா டி சில்வா, பானுகா ராஜபக்சே, அசலங்கா, ஷனகா சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இவ்விரு அணிகள் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் நியூசிலாந்தும், 8-ல் இலங்கையும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.