பள்ளி பாடத்திட்டத்தில் புனீத் ராஜ்குமார் சாதனைகள் – முதல்வர் அறிவிப்பு!

மறைந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமார் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சாதனைகள் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.

பிரபல கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார், 46, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் மறைந்து ஓராண்டு ஆகி உள்ளதை அடுத்து, அவரது நினைவு தினத்தை ஒட்டி, கர்நாடக மாநில அரசு சார்பில் மாநில அரசின் உயரிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்து ஓராண்டு ஆகி விட்டது. கர்நாடகா மற்றும் கன்னட மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் மக்கள் மனதில் அவருக்கு இருக்கும் கௌரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக ரத்னா விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இது கன்னட ராஜ்யோத்சவத்தின் சிறப்பம்சமாகும். அவர் பலவித மனிதாபிமானப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

புனித் ராஜ்குமாரின் சாதனைகள் குறித்துப் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம். புனீத் ராஜ்குமார் தனது உறுப்புகளை தானம் செய்தவர். இது அவரது சேவையைப் பற்றிப் பேசுகிறது.

அவரது மறைவுக்குப் பின், பலர் தங்கள் கண்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர். புனித் ராஜ்குமார் குறுகிய காலத்தில் உத்வேகம் தரும் பணியையும் சேவையையும் செய்துள்ளார். எங்களால் முடிந்தவரை அவருடைய செய்தியை முன்னெடுத்துச் செல்வோம. மாநிலத்தில் கன்னடத்தைக் கட்டாயமாக்க, தனது அரசு குளிர்கால கூட்டத்தொடரில் சட்டம் கொண்டு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.