குன்னூரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இடிப்பாட்டில் சிக்கிக் கொண்டனர். வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் பழமையான தடுப்புச் சுவர் குடியிருப்பு பகுதியில் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சமயதுல்லா என்பவரின் வீடு சேதமடைந்து. வீட்டில் இருந்த சர்மிளா, சலாமுல்லா, உபயதுல்லா ஆகியோர் இடிபாட்டில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயவைப்புத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மீட்பு பணியில் விரைந்து பணியாற்றி மூன்று பேரையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று பேருக்கும் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பை அடுத்த பிரகாஷ் ராவ் காலணியில் வசித்து வரும் சாந்தி என்ற பெண் வீட்டின் ஸ்லாப் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வீட்டில் வாசலில் கோலம் போடுவதற்காக சென்றபோது மேற்கூரை இடிந்து விழுந்து பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் வீடுகளில் அருகில் உள்ள பழமை வாய்ந்த சுவர் மற்றும் கட்டிடத்தின் உறுதித் தன்மை சோதித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.