இதுதான் காங்கிரஸ் உத்தி: பிரதமர் மோடி பொளேர்!

மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இம்முறை நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கானவை. பாஜக என்றால் நிலையான அரசு. வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு என்பது மக்களுக்கு தெரியும். எனவே, இம்மாநிலத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என அவர்கள் முடிவெடுத்து விட்டனர்.” என்றார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது நீங்கள் சரியாக வாக்களித்தீர்கள். அதன் காரணமாகவே இமாச்சலப் பிரதேசத்தில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதுதான்
காங்கிரஸ்
கட்சியின் வாடிக்கை என சாடிய பிரதமர் மோடி, மக்களை ஏமாற்றுவதற்கான காங்கிரஸ் கட்சியின் மிக நீண்ட கால உத்தி இது. இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் முன்னுரிமை கொடுத்தது கிடையாது. ஆனால், பாஜக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, இமாச்சலப் பிரதேச தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிம்லாவில் உள்ள மாநில கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அந்த தேர்தல் அறிக்கை, வெறும் வாக்குறுதிகள் மட்டும் இல்லை. இமாச்சலப் பிரதேசத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆவணம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்த நிலையில், பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதுதான் காங்கிரஸ் கட்சியின் உத்தி என பிரதமர் மோடி சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.