அம்மா, அப்பா, அண்ணன், நான் என அன்பான குடும்பம் எங்களுடையது. மூன்று வருடங்களுக்கு முன் எனக்குத் திருமணம் முடித்தனர் வீட்டில். சொந்தமாக டாக்ஸி வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார் கணவர். விருப்பமே இல்லாமல் வாழ்வதுபோல்தான் வாழ்ந்தார் என்னுடன். நான் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, வீட்டை விட்டு எங்கோ போய்விட்டார். புகுந்த வீட்டினரோ, ‘கல்யாணத்துக்கு முன்னாடியும் இப்படித்தான் வீட்டுல யார்கிட்டயும் ஒட்டாம, விட்டேத்தியா இருந்தான். கல்யாணம் பண்ணினா சரியாகிடுவான்னு நினைச்சோம். ஆனா, மாசமா இருக்குற பொண்டாட்டியக்கூட விட்டுட்டுப் போயிட்டானே’ என்றார்கள். போனவர், இன்று வரை வரவில்லை. எங்கிருக்கிறார் என்றுகூட தெரியவில்லை.

நான் கர்ப்பிணியாக என் பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். என் நிலையைப் பார்த்துப் பார்த்தே உக்கிய என் அப்பா, மாரடைப்பு வந்து இறந்துபோனார். அடுத்த சில மாதங்களில், அம்மா கொரோனா பாதிப்பில் இறந்துபோனார். நான், அண்ணா, என் கைக்குழந்தை என்று துயருற்று நின்றோம். வீட்டில் மகிழ்ச்சி என்ற ஒன்றே இல்லாமல் போனது. என் அண்ணனுக்கு 30 வயது கடந்துவிட்டதால், அவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தினேன். என் நிலையைச் சொல்லி அவர் மறுத்தார். ‘ஒருவேளை என் கணவர் திரும்பி வரவே இல்லை என்றால், என் நிலையும் மாறப்போவதே இல்லை. அதற்காக நீ எத்தனை வருடங்கள் வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பாய்?’ என்று என் அண்ணனுக்கு எடுத்துச் சொல்லி, திருமணத்தை முடித்தோம்.
என் அண்ணிக்கு, வந்ததில் இருந்தே என்னைப் பிடிக்காமல் போனது. நிராதரவாக நிற்கும் எனக்கு அப்பா, அம்மா, அண்ணன் என எல்லாமுமாக என் அண்ணன் ஏற்க வேண்டியிருந்த பொறுப்பு, என் குழந்தையை அண்ணன் ஆசையாகக் கொஞ்சும் அன்பு, என்னிடம் அண்ணன் காட்டும் பரிவு என… இவை எதுவுமே என் அண்ணிக்குப் பிடிக்கவில்லை. ஒரு புது மணப்பெண்ணாக, அவருக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும், ‘பெர்சனல் ஸ்பேஸ்’ தேவைப்படும் என்பதெல்லாம் எனக்கும் புரிந்தது. எனவே, முடிந்தவரை, நான் முன்புபோல் அல்லாமல் அண்ணனிடமிருந்து விலகியே இருந்தேன். ஆனாலும், அண்ணிக்கு எங்கள் வீட்டில் நான் இருப்பதே பிடிக்கவில்லை என்றானது.

என்னை முன்னிறுத்தி, அண்ணனுக்கும் அண்ணிக்கும் நிறைய சண்டைகள் வர ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில், ‘உங்க தங்கச்சியை பக்கத்துலயே ஒரு வீட்டில் தனியா குடித்தனம் வெச்சா, நாம சேர்ந்து வாழலாம். இல்லைன்னா நான் ஹாஸ்டலில் போய் தங்கிக்கிறேன்’ என்றார். அண்ணன், என்னை தனி வீட்டில் குடிவைக்க மறுத்துவிட்டார். கோபத்தில் அண்ணி எங்கள் வீட்டிலிருந்து வெளியேறி, இப்போது பேயிங் கெஸ்ட்டாக உள்ளூரிலேயே ஒரு வீட்டில் தங்கியபடி, அலுவலகம் சென்று வருகிறார். அவர் அப்படி செய்தது என் அண்ணனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால், அவரை சமாதானம் செய்து அழைத்து வர செல்ல மறுக்கிறார்.
‘நான் பக்கத்துலயே ஒரு வீட்டுல தனியா இருக்குறேன், நீயும் அண்ணியும் நம்ம வீட்டுல இருங்க. இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல’ என்று நான் அண்ணனிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டேன். மறுத்துவிட்டார். என் அண்ணியிடம் சென்று, ‘வீட்டுக்கு வாங்க முதல்ல. குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் அதை ஸ்கூல்ல சேர்த்துட்டு, நானும் ஒரு வேலையில சேர்ந்திடுறேன். அப்புறம் நானே தனியா போய்டுறேன்’ என்று பேசிப்பார்த்துவிட்டேன். இப்போது அவர் என்னைவிட, தன்னை சமாதானப்படுத்த அழைக்க வராமல் இருக்கும் என் அண்ணன் மீது மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்.

நிராதரவான என் சூழ்நிலை, அதனால் என் அண்ணன், அண்ணிக்கு இடையில் ஏற்பட்ட விரிசல், அவர்கள் ஈகோ வளர்ந்துகொண்டே இருக்கும் ஆபத்து… என்னால் ஏற்பட்ட பிரச்னையை எப்படி தீர்க்க நான்?