'எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க..!' – ட்விட்டர் ஊழியர்களிடம் மனமுருகிய ஜாக் டோர்சி!

ட்விட்டர் நிறுவன ஊழியர்களிடம் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

உலகின் மிகவும் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.

மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ட்விட்டர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உட்பட சுமார் 7 ஆயிரத்து 500 பேர் நேற்று ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ட்விட்டரில் ஊழியர்கள் குறைப்பு தொடர்பாக, துரதிஷ்டவசமாக நிறுவனம் ஒரு நாளைக்கு ரூ.32 கோடியை இழக்கும்போது வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.

‘ரூ.500 கோடி கேட்டார்..! அரவிந்த் கெஜ்ரிவால் பெரிய ஃப்ராடு’ – சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்நிலையில், ட்விட்டர் நிறுவன ஊழியர்களிடம் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மன்னிப்புக் கேட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

ட்விட்டரில் முன்பு பணியாற்றியவர்கள் மற்றும் இப்போதும் பணியாற்றுபவர்கள், வலிமையான மற்றும் நெகிழ்ச்சியானவர்கள். எவ்வளவு கடினமான தருணத்திலும் அவர்கள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள்.

பலர் என் மீது கோபமாக இருப்பதை நான் உணர்கிறேன். இந்த நிலைமை ஏற்பட்டதற்கு நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ட்விட்டரில் இதுவரை பணியாற்றிய அனைவருக்கும் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.