கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். 6 பேரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் சிறையில் விசாரணை நடத்தினர். 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு ஏதுவாக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரையும், சென்னை புழல் சிறைக்கு மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே, முபினின் வீட்டுக்கும், கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதிக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சி வெளியீடு: கோட்டை ஈஸ்வரன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த கார் வெடிப்பு காட்சியை போலீஸார் கைப்பற்றியிருந்தனர். அந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கோயிலின் முன்பு அக்டோபர் 23-ம் தேதி காலை 4.01 மணிக்கு கார் வந்து நிற்கிறது. ஒன்றரை நிமிட இடைவெளியில் திடீரென கார் வெடிக்கிறது. இந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக பூட்டப்பட்டிருந்த கோயிலின் கதவு திறந்ததும், சிசிடிவி கேமரா 3 நிமிடங்கள் இயங்கவில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டு வந்த தகவலும், சமீபத்தில் தான் முபின் கார் ஓட்டிப் பழகினார் என்ற தகவலும் தெரியவந்தது. அதேபோல், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு செய்வது போல, கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் தனது உடலில் உள்ள முடியை மழித்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகரில் 3 ஆயிரம் போலீஸார், துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது பதற்றம் குறைந்ததைத் தொடர்ந்து வெளிமாவட்ட போலீஸார் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். மாநகர போலீஸார் மற்றும் 8 கம்பெனி தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினர் ஏறத்தாழ ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.