குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி?.. கருத்துக் கணிப்பில் தகவல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் சி-வோட்டர், ஏபிபி தனியார் நிறுவனங்கள் குஜராத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி, ‘182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜக 131 முதல் 139 இடங்களை கைப்பற்றும். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. 2017ல் 77 இடங்களை பெற்றிருந்த காங்கிரசின் எண்ணிக்கை, இந்த முறை 31 முதல் 39 இடங்களை கைப்பற்றும். அதேநேரம் ஆம் ஆத்மி கட்சி 7 முதல் 15 இடங்களை கைப்பற்றும். அதே 2017ம் ஆண்டு தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத் பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் யமல் வியாஸ் கூறுகையில்:
கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட இடங்களை காட்டிலும் அதிக இடங்களை கைப்பற்றுவோம்’ என்றார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இந்த கருத்துக்கணிப்பை நிராகரித்தன.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அமித் நாயக் கூறுகையில்:
கடந்த கால அனுபவங்களின்படி பல கருத்துக் கணிப்புகள் பொய்த்து போயின. ஆட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குஜராத்தில் களம் இறங்கியுள்ளன. இதன் பின்னணியில் பாஜக உள்ளது. இந்த முறை அவர்களின் வியூகம் தோல்வியடையும். ஆம் ஆத்மி கட்சியானது பாஜகவின் ‘பி’ டீம் ஆக செயல்படுகிறது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.