முறைகேடாக பத்திரப்பதிவு செய்வதற்கு சில சார்பதிவாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. அந்த சமயத்தில் அவருக்கு கட்டாய விடுப்பு கொடுத்துவிட்டு வேறு அலுவலரை நியமித்து பத்திரப்பதிவு செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெறும். அதுபோன்ற ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்துள்ளது. இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றிவந்தவர் நேற்று விடுப்பில் இருந்துள்ளார். அதத்கு பதிலாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவி சார்பதிவாளராக பணியாற்றும் சுப்பையா என்பவர் அங்கு பணிபுரிந்துள்ளார். அவரை இரணியலில் பணிபுரிய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் ஆன்லைனின் முன்பதிவு செய்து டோக்கன்பெற முடியாமல் தவித்தனர். அதே சமயம் அரசு அனுமதி பெறாத வீட்டு மனைகளுக்கு சட்ட விரோதமாக டோக்கன் வழங்கி முறைகேடாக பத்திர பதிவு செய்து வருவதாக சிலர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் அளித்தனர்.

இதையடுத்து நேற்று மாலையில் திடீரென மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை கண்டதும் சில புரோக்கர்கள் ஓட்டம்பிடித்தனர். அலுவலக ஊழியர்கள் அலுவலக ஜன்னல் கம்பிகளுக்கு இடையிலும் பணங்களை சொருகி மறைத்து வைத்தனர்.
சார் பதிவளர் அலுவலகத்தில் நேற்று இரவு வரை நடந்த சோதனையில் கணக்கில் வராத நான்கு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய் (ரூ.4,52,800) பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முறைகேடாக பதிவுசெய்ததாக கூறப்படும் 78 வீட்டு மனை பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொறுப்பு சார்பதிவாளராக செயல்பட்ட சுவாமிதோப்பு விஜயநகரியைச் சேர்ந்த சுப்பையா, மற்றும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 4 பேர், இடைத்தரகர்கள் 6 பேர் என 11 பேர் மீது லஞ்சஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கைப்பற்றப்பட்ட 78 பத்திரங்களும் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசரணை நடத்தி வருகின்றனர்.