பரத் படத்தில் நடிக்க வாணி போஜன் விதித்த நிபந்தனை

பரத், வாணி போஜன் நடித்துள்ள படம் மிரள். கே.எஸ்.ரவிகுமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, அர்ஜெய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார், அறிமுகம் எம்.சக்திவேல் இயக்கி உள்ளார். பிரசாத் இசை அமைத்துள்ளார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பரத் பேசியதாவது: என்னுடைய 19 வருட சினிமா அனுபவத்தில் இந்த படத்தின் இயக்குனரைத்தான் பெர்பக்டான அறிமுக இயக்குனராக பார்க்கிறேன். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு ஏற்கெனவே ஒரு படம் நடிப்பதாக இருந்து அது நடக்காமல் போனது. இந்த படத்திற்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல் தடுமாறியபோது ஆக்சிஸ் நிறுவனத்திற்கு போகலாமா, போனால் ஏற்பார்களாக என்ற தயக்கம் இருந்து. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போம் என்று கருதியதன் பலனால் இன்று இந்த படம் வந்திருக்கிறது.

என்னுடைய எல்லா படத்திற்கு பின்னாலும் இப்படி ஒரு பயணம் இருக்கிறது. நல்ல கதை இருந்தால் தயாரிப்பாளர் கிடைக்க மாட்டார்கள். பிடிக்காத கதையாக இருந்தால் தயாரிப்பாளர் உடனே கிடைப்பார்கள், அந்த கதைதான் வேண்டும் என்பார்கள், பிடிக்காத கதையில் எப்படி நடிப்பது என்று மறுத்து விடுவேன். ஒவ்வொரு படத்திற்கு பின்னாலும் இப்படியான பயணம் இருக்கிறது. என்றார்.

இயக்குனர் சக்திவேல் பேசியதாவது: இந்த படத்தில் பரத் நடிப்பது உறுதியாகி இருந்தது. ஹீரோயினாக நடிக்க நான் பலரை மனதில் வைத்திருந்தேன். அப்போது தயாரிப்பாளர் வாணிபோஜன் படத்தை அனுப்பி இந்த பெண் சரியாக இருப்பாரா என்று பாருங்கள் என்று ஒரு போட்டோவை அனுப்பி வைத்தார். போட்டோ எனக்கு பிடிக்கவில்லை. அவர் என் மனதில் இருந்த கேரக்டராக இல்லை. இதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவரை நேரில் பாருங்கள் பிடித்திருந்தால் கதை சொல்லுங்கள் என்று சொன்னார்.

வாணி போஜனை சந்தித்தேன். நான் மனதில் வைத்திருந்த கேரக்டராக இருந்தார். அந்த போட்டோதான் சரியில்லை. இந்த படத்தில் 8 வயது சிறுவனுக்கு தயாக நடிக்க வேண்டும் அதற்கு ஒத்துக் கொண்டால் கதை சொல்கிறேன். என்றேன். அதற்கு அவர் சரி சொல்லுங்கள் கேட்கிறேன். என்றார்.

பாதி கதை சொல்லி முடித்ததும் இந்த படத்தில் நான் நடிக்கிறேன். மீதி கதையை நீங்கள் சொல்ல வேண்டாம், ஆனால் ஒரு நிபந்தனை இந்த கதையை இனி வேறு எந்த நடிகையிடம் சொல்லக்கூடாது என்றார். அதன்படி அந்த கதையை வேறு யாரிடமும் சொல்லவில்லை. சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.

இவ்வாறு சக்திவேல் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.