புதுடில்லி : பா.ஜ., தலைவர்கள் தன்னுடன் பேரம் பேசிய தாக, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ., ‘அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர்’ என, பதிலடி கொடுத்துள்ளது.
பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. இங்கு பா.ஜ., மற்றும் காங்கிரசுடன், ஆம் ஆத்மியும் மூன்றாவது கட்சியாக களத்தில் உள்ளது. இந்நிலையில்,
புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் கூறியதாவது:
குஜராத் சட்டசபை தேர்தலில் தோற்று விடுவோம் என பா.ஜ., தலைவர்களுக்கு பயம் வந்து விட்டது.
இதனால், குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டால், எங்கள் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து விடுவதாக என்னிடம் பேரம் பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் செய்யது ஜாபர் இஸ்லாம் நேற்று கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது அப்பட்டமான பொய். அவர் ஒரு பொய்யர். குஜராத் மக்களிடம் பா.ஜ.,வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவும், மக்களை தவறாக வழி நடத்தும் வகையிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பா.ஜ.,வுக்கு எதிராக கூறி வருகிறார்.
அரசியலுக்கு வருவதற்காக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயை பயன்படுத்தினார். புதுடில்லியில் ஆட்சியை பிடித்ததும், அன்னா ஹசாரேயை கழற்றி விட்டார்.
அதிகாரத்துக்கு வருவதற்காக யாரை வேண்டுமானாலும் கழற்றி விடும் அரசியல்வாதி தான் கெஜ்ரிவால். அவரது பொய் குற்றச்சாட்டுகளுக்கு குஜராத் மக்கள், தேர்தலில் சரியான பதிலடி கொடுப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்