உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைத் தன் வசப்படுத்தியதிலிருந்து தினமும் டிரெண்டாகி வருகிறார்.
ட்விட்டரில் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளைக் குறிக்கப் பயன்படும் ப்ளூ டிக் வைத்திருக்கும் ப்ளூ டிக் பயனாளர்களிடம் மாதம்தோறும் 19.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.1,600 வரை) கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில் இந்தப் புதிய ப்ளூ டிக் கட்டணம் தொடர்பான சர்ச்சை குறித்து ஸ்டீபன் கிங் என்ற பிரபல அமெரிக்க நாவலாசிரியர், “ஒரு ப்ளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா? நீங்கள்தான் எனக்கு பணம் தர வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் நான் திவாலாக வேண்டியதுதான்” என்று ட்வீட் செய்திருந்தார்.
Trash me all day, but it’ll cost $8
— Elon Musk (@elonmusk) November 5, 2022
இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், “நாங்களும் எப்படியாவது பணத்தை எடுத்தாக வேண்டுமே! ட்விட்டர் விளம்பரதாரர்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. 8 அமெரிக்க டாலர் (ரூ.625) என்றால் செலுத்துவீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதன் மூலம் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மஸ்க் உறுதி செய்த நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அவர் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “என்னை நாள் முழுவதும் விமர்சியுங்கள்; ஆனால் அதற்கு 8 டாலர் கட்டணம்!” என்று பதிவிட்டிருக்கிறார்.
அதாவது அவரை விமர்சிப்பதும் ட்விட்டரில் என்பதால், ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் அதற்காக 8 டாலர்களை மறக்காமல் கட்டிவிடவும் என்று கேலி செய்திருக்கிறார் எலான் மஸ்க். அவரின் இந்தப் பிடிவாத குணம் குறித்து பலரும் கோபமடைந்துள்ளனர்.