கம்பம்: கம்பம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் சொத்துக்கள் பதிவு செய்யும் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப், சுருளியாறு மின்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்யுவும், வாங்கவும் பத்திரப்பதிவு செய்ய கம்பம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரவேண்டும்.
பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள இந்த அலுவலகமானது ரோட்டைவிட பள்ளமான இடத்தில் இருக்கிறது. இதனால் மழை பெய்தால் சாக்கடை கழிவுநீர் அனைத்தும் பத்திரப்பதிவு அலுவலக வளாகத்திற்குள் வந்துவிடுகிறது. இதனால் பத்திரப் பதிவுக்கு வரும் பொதுமக்கள் சாக்கடை கழிவுநீரில் நடந்து அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது.
நாள்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் பத்திரப்பதிவு நடக்கும் இந்த அலுவலகத்திற்குள் மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீர் புகுவதை தடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.