லக்னோ: உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியை சேர்ந்தவர் முக்தர் அன்சாரி (59). நிழல் உலக தாதாவாக அறியப்படும் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து மாவ் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்த் கொலை வழக்கு உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முக்தர் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி (30), சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் சார்பில் மாவ் தொகுதியில் வெற்றி பெற்றார்.
கடந்த 2020-ம் ஆண்டில் விகாஸ் என்ற கட்டுமான நிறுவனம், முக்தர் அன்சாரி, அவரது மகன் அப்பாஸ் அன்சாரிக்கு பெருந்தொகையை அளித்தது. அந்த தொகை மூலம் தந்தையும் மகனும் லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை வாங்கினர். இதுதொடர்பாக அமலாக்கத் துறை கடந்த 2021-ம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்தர் அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரியிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. 12 மணி நேரம் நீடித்த விசாரணையின் இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.