கலிபோர்னியா: சில சர்வதேச நாடுகளில் ட்விட்டர் நிறுவனத்தின் ப்ளூ டிக் சந்தா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வெகு விரைவில் இந்த கட்டண சந்தா நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. இருந்தாலும் இப்போதைக்கு ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு மட்டுமே இந்த சந்தா கட்டண முறை அறிமுகமாகி உள்ளது. இதனை எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். அவரது நடவடிக்கைகளில் ஒன்றுதான் ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் அதற்கென மாதந்தோறும் கட்டண சந்தா வசூலிப்பது. இது பல்வேறு தரப்பில் விவாதத்தை எழுப்பி உள்ளது. இருந்தாலும் அந்த முடிவில் மஸ்க் உறுதியாக உள்ளார்.
இந்த சூழலில் குறிப்பிட்ட சில நாடுகளில் ப்ளூ டிக் பயனர்கள் இடத்தில் சந்தா வசூலிக்கும் முறையை ட்விட்டர் அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிரிட்டனில் ப்ளூ டிக் சந்தா அறிமுகம் செய்யப்பட்டடுள்ளது. இந்த நாடுகளில் மாதத்திற்கு 8 அமெரிக்க டாலர்களில் சந்தாவாக வசூலிக்க உள்ளது ட்விட்டர். இந்திய ரூபாய் மதிப்பில் இதன் தொகை சுமார் 662 ரூபாய். இந்தியாவில் அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த சந்தா நடைமுறைக்கு வரும் என மஸ்க் தெரிவித்துள்ளார். பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ட்வீட் மூலம் பதில் அளித்துள்ளார் அவர்.
ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணி நீக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார் மஸ்க். இதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்தியாவில் சுமார் 50 சதவீதம் ஊழியர்கள் தங்கள் பணிகளை இழந்துள்ளதாக தகவல்.